விழுப்புரம்,செப்.17: விழுப்புரம் மாவட்ட அளவிலான பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தின்போது கலெக்டரிடம் 523 கோரிக்கை மனுக்கள் குவிந்தன., விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமைவகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 523 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

மாற்று தினாளிகள் உட்கார்ர்திருந்த இடத்திற்கே கலெக்டர் சென்று ஒவ்வொருவரிடமும் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.