சென்னை, செப்.18: ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கிலோ கணக்கில் வாங்கிவந்து, வீட்டில் பதுக்கிவைத்து வடசென்னையில் சப்ளை செய்துவந்த மொத்த விற்பனையாளரை சென்னை மீன்பிடி துறைமுகம் போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மீன்பிடி துறைமுகம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது, சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அறுப்புராஜ் என்பதும், அவரிடமிருந்து கால் கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். மொத்த வியாபாரி குணசேகரனிடம் இருந்துதான் கஞ்சா வாங்கி விற்பதாக அறுப்புராஜ், போலீசில் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில், மீன்பிடி துறைமுகம் காவல்துறை இன்ஸ்பெக்டர் கவிதா தனிப்படை அமைத்து, குணசேகரனை பிடிக்க திட்டமிட்டனர். போலீசார் அறிவுறுத்தியபடி, குணசேகரனை போனில் தொடர்புகொண்ட அறுப்புராஜ், அவசரமாக கஞ்சா வேண்டும் என்றுகூறி, தேசிய நகருக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதன்பேரில், குணசேகரன் சம்பவ இடத்திற்கு வர, அங்கு மறைந்திருந்த போலீசார், குணசேகரனை சுற்றிவளைத்து பிடித்து, அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆய்வு நடத்தினர்.

அங்கிருந்த 10 கிலோ எடையுடைய கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், குணசேகரனை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்த குணசேகரன், அவற்றை காசிமேடு, புது வண்ணாரப்பேட்டை, சென்னை மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் விற்பனை செய்துவந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சென்னை பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், குணசேகரனை புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது காசிமேடு காவல் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா கடத்திய வழக்கு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஐஸ்ஹவுஸ் சிவராஜபுரம் பகுதியில், கஞ்சா விற்ற பசில் (வயது 23), திருவல்லிக்கேணியை சேர்ந்த ராம்குமார் (வயது 24) ஆகியோரை கைது செய்த போலீசார் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனிடையே, துரைப்பாக்கம் போலீசார் கல்லுக்குட்டை பகுதியில் சோதனை நடத்தி சுப்ரமணி என்பவரை கைது செய்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், எண்ணூர் பகுதியில் கஞ்சா விற்ற ஆஷா (வயது 50), ஜமுனா (வயது 38) என்பவர்களை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.