சென்னை, செப்.19: தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வதற்கு வசதியாக அக்டோபர் 23-ந் தேதி முதல் அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், பேருந்து உரிமம் ரத்து செய்வது தொடர்பாக அரசு போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்வபவர்களுக்கு ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் 4,542 பேருந்து உட்பட பிறமாவட்டங்களில் இருந்தும் ஒட்டு மொத்தமாக 20,567 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்காக தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அரசு சார்பில் இயக்கப்படவுள்ள பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்காக பயணிகள் காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு அரசு சார்பில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளுக்கு மட்டும்தான் முன்பதிவு செய்யப்படும். அதற்கு குறைவான தூரங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு பயணிகளுக்கு டோக்கன் வழங்கி நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வெளியூர் செல்லக் கூடிய பயணிகள் 6 பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த 6 பேருந்து நிலையங்களுக்கும் கோயம்பேட்டில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் தீபாவளிக்கான பேருந்து நிலையங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சிறப்பு கவுண்டர்கள் கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு பேருந்துகள் தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம், இந்த பேருந்துகளில் சாதாரண நாட்களில் வசூலிக்கும் கட்டணத்தை காட்டிலும் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து பயணிகளிடமிருந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்க பயணிகள் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் பணியை வட்டார போக்குவரத்து துறை மேற்கொண்டு வந்தாலும், தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பது எனவும், அதன் மூலம் பெறப்பட்டும் புகார் அடிப்படையில் சோதனை நடத்தி, புகார் உண்மையெனில் ஆம்னி பேருந்தின் உரிமம் ரத்து செய்வது என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.