சென்னை, செப்.20: திருவல்லிகேணி அருகே மாட்டான் குப்பத்தில் கூலித்தொழிலாளியை வெட்டி கொலை செய்து மூளையை தனியாக தட்டில் வைத்துவிட்டு சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை, மாட்டான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அரி என்கிற அறிவழகன் (வயது 24). கூலித்தொழிலாளி. நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் வீட்டினுள் நுழைந்து சாப்பிட்டு கொண்டு இருந்த அறிவழகனை சரமாரியாக கத்தியால் வெட்டி உள்ளனர்.

பின்னர் அவரது தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த அந்த கும்பல் அதனை அவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்த தட்டில் போட்டு விட்டு சென்றுவிட்டது. வெளியே சென்று இருந்த அவரது தாய் லட்சுமி வீட்னுள் வந்து பார்த்த போது அவரது மகன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்த வந்த அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு திருவல்லிக்கேணி பகுதியில் பல்பு குமார் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அறிவழகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது சகோதரர் விஜய் என்பவராவார். அண்மையில் அவரையும், கொலை செய்யும் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

பல்புகுமார் கொலையில் தொடர்பு இருப்பதால் அவரது கூட்டாளிகள் இவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், கொலையாளிகள் வந்த ஆட்டோ விவரங்களை வைத்தும் போலீசார் மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

அறிவழகனை கொலை செய்ததுடன் கொடூரமாக அவரது தலையை வெட்டி மூளையை தட்டில் எடுத்து வைத்து விட்டு சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.