பெங்களூரு, செப்.20: சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் அரசு சார்பில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதியோரை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பெங்களூருவில் உள்ள காண்டீவரா விளையாட்டு அரங்கில் நடந்த இந்த போட்டிகளில், சுமார் 250 முதியவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உற்சாகமாக விளையாடினர்.

இதில், 71 முதல் 80 வயது வரையிலான முதியோர் பிரிவினருக்கான 200 மீட்டர் நடை போட்டியில், 72 வயது லலிதாம்மா முதலிடத்தைப் பிடித்தார். 100 மீட்டர் நடை போட்டியில் 81 வயது சரோஜாம்மா முதல் பரிசை பெற்றார்.

முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் ஏராளமான முதியவர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர்.