சென்னை, செப்.20: தனது வீட்டில் வேலை செய்த ஆந்திர மாநில சிறுமியை துன்புறுத்தியதாக நடிகை பானுபிரியா மற்றும் அவரது சகோதரர் மீது அந்த சிறுமியின் தாய் அளித்துள்ள புகாரின்பேரில், பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்தவர் பெனுபாகலா பிரபாவதி (வயது 35). இவரது 16 வயது மகள், சென்னையில் உள்ள நடிகை பானுபிரியா வீட்டில் கடந்த 2018-ம் பிப்ரவரி மாதம்முதல் பணியாளாக வேலை பார்த்து வந்தார்.  அப்போது, நடிகை பானுபிரியா வீட்டில் இருந்த 15 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம், ஐபேட், விலையுயர்ந்த கேமரா மற்றும் கடிகாரங்கள் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டதாக, பானுபிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில், பிரபாவதி மற்றும் அந்த சிறுமியை போலீசார் கைது செய்து, கெல்லீஸ் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுமியை சேர்த்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்துவந்தபோது தனது மகளை கொடுமைப்படுத்தியதாக சிறுமியின் தாய் பிரபாவதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தபால் மூலம் புகார் அளித்துள்ளார். இந்தாண்டு மார்ச் மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின்பேரில், இளஞ்சிறாரை பணிக்கு அமர்த்துதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நடிகை பானுபிரியா மற்றும் அவரது சகோதரர் மீது சம்மன்கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், சம்பவ நடந்த இடம் சென்னை பாண்டிபஜார் என்பதால், விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கின் கோப்புகளை சென்னை பாண்டிபஜார் போலீசுக்கு, ஆந்திர மாநில (சம்மன் கோட்டா) போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். இந்த கோப்புகளை பெற்றுக்கொண்ட பாண்டிபஜார் போலீசார், இது தொடர்பாக, பானுபிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.