கொழும்பு, செப்.20:  பாகிஸ்தானில் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி திட்டமிட்டபடி பங்கேற்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடிய இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு, பாதுகாப்பு கருதி இலங்கை அணி மறுத்துவருகிறது. இதனிடையே, வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை பாகிஸ்தானுக்கு சென்று, அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாட இலங்கை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்கவில்லை என்று இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் மலிங்கா, மேத்யூஸ், பெரேரா, தனஞ்செய டி சில்வா, திமுத் கருணாரத்னே உள்ளிட்ட 10 வீரர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் அல்லாமல், லஹிரு திரிமன்னா, துஷான் ஷனகா தலைமையிலான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதனையடுத்து, பாகிஸ்தான் செல்லவிருக்கும் இலங்கை அணிக்கு பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததால், இந்த தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் நிலவிவந்தது. இந்த நிலையில், திட்டமிட்டபடி பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் தொடர் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு ஆபத்து ஏதும் நேராது என தங்கள் நாட்டு அரசு உறுதியளித்ததை தொடர்ந்து இம்முடிவை எடுத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.