சென்னை, செப்.20: மாத்தூரில் வீட்டினுள் புகுந்து பத்தரை சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் கைது செய்தனர். மாத்தூரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 49). இவர், கடந்த மே மாதம் அதிகாலை எழுந்து, தனது வீட்டை பூட்டிக்கொண்டு, அருகில் உள்ள கல்லின் கீழ் சாவியை வைத்துவிட்டு, டீக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு டீ குடித்துவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த பத்தரை சவரன் நகை கொள்ளைப்போயிருந்தது, தெரியவந்தது. இது குறித்து, முகுந்தன் அளித்த புகாரின்பேரில், மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் திருவாடனை தாலுக்காவை சேர்ந்த ரவி (வயது 44) என்பதும், இவர் சென்னையில் தங்கி லாரி டிரைவராக பணியாற்றி வந்ததும், சம்பவத்தன்று முகுந்தன் சாவியை வைத்ததை நோட்டமிட்டு கொள்ளையடித்ததும் தெரியவந்தது.