புதுடெல்லி, செப்.21: விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற தொகுதிகளில் அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார். இந்த தேர்தலுடன் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது. அக்டோபர் 24-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி கடந்த ஜூன் 14-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதையடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி, நாங்குனேரி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 64 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, அரியானாவில் மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறும் என அறிவித்தார். இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவி காலம் நவம்பர் 2-ந் தேதியும், 98 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டமன்றத்தின் பதவி காலம் நவம்பர் 8-ந் தேதியும் முடிவடைகிறது. எனவே இந்த இரு சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் பிஜேபி-சிவசேனை கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த இரு கட்சிகளுடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடைபெறுகிறது. சரிபாதி இடங்களில் போட்டியிடலாம் என்று சிவசேனை கூறியதை ஏற்க பிஜேபி மறுத்துவிட்டது. எனவே பேச்சுவார்த்தை யில் இழுபறி நீடிக்கிறது.

அரியானாவில் 2014-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசிடம் இருந்து பிஜேபி ஆட்சியை கைப்பற்றியது. இந்த மாநிலத்தில் பிஜேபி தனித்தே நிற்கும் என்பதால் காங்கிரசுடன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை

விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகு திகளில் வேட்பு மனு தாக்கல் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 30-ம் தேதி. மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும். வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் அக்டோபர் 3 ஆகும்.