புதுடெல்லி, செப்.21: பிரதமர் மோடி 7 நாள் பயணமாக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டார். செல்லும் வழியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இன்று காலை சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

அவரது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதை சரிசெய்த பிறகு 2 மணி நேரம் தாமதமாக நியூயார்க் புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவுடனான இரு தரப்பு நட்புறவை மேம்படுத்துவதற்காகவும், ஐ,நா.வின் 74-வது பொதுச்சபை கூட்டத் தில் உரையாற்றுவதற்காகவும், பிரதமர் மோடி நேற்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.

வழியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இன்று காலை அவரது விமானம் தரையிறங்கியது. அங்கு மோடி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மோடியின் விமானத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதால் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டார்.

அமெரிக்காவில் ஹவுஸ்டன் நகரில் “ஹவுடி மோடி’’ (மோடி நலமா) என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமெரிக்காவில் வாழும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் வட்ட மேஜை மாநாடு நடத்துகிறார். செப்டம்பர் 23-ந் தேதி நியூயார்க் வந்து சேரும் மோடி அங்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் கலந்துகொண்டு பருவநிலை மாற்றம் தொடர்பாக எதிர் கொள்ள வேண்டிய கூட்டத்தில் பங்கேற்கிறார். இது தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை மோடி எடுத்துரைக்கிறார்.