புதுடெல்லி, செப்.21:  இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி மகத்தான பங்களிப்பை அளித்துவந்தாலும், அவரது இடத்துக்கு அடுத்த வீரரை கொண்டுவர வேண்டிய நேரம் இது என்பதால், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு முன்னர், அவரே சென்றுவிடுவார் என்று நினைப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்குபின்னர், இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கிரிக்கெட் விளையாடியது. தற்போது, தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடிவருகிறது. இதனைத் தொடர்ந்து, வங்கதேச அணியுடன் கிரிக்கெட் விளையாட உள்ளது. இது குறித்து, இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தோனியை சேர்க்க வேண்டியதில்லை. தோனியை ஒதுக்கிவிட்டு அவருடைய இடத்துக்கு யாரை கொண்டுவர வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் நிச்சயமாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

ஒரு வேளை அவர் சரியாக விளையாடாத பட்சத்தில், சஞ்சு சாம்சன்தான் எனது அடுத்த தேர்வு. அவர் நல்ல விக்கெட் கீப்பர் மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேனும் ஆவார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இளம் வீரர்களை தான் முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி மகத்தான பங்களிப்பை அளித்திருந்தாலும், அவரை தாண்டி அடுத்த வீரரை அந்த இடத்துக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இதுவாகும். தோனியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளுவதற்கு முன்பாக அவரே சென்று விடுவார் என்று நினைக்கிறேன், என்றார்.