சென்னை, செப்.21:  குற்றாளத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு மாயமான கார் டிரைவர் கடந்த 16-ம் தேதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில். 5 நாட்கள் கழித்து தற்போது அவர் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி கண்டறியப்பட்டால் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடலாம் என்று போலீஸ் தரப்பில் கருதப்படுகிறது.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது இனோவா காரை டிராவல்ஸ் மூலமாக வாடகைக்கு விட்டு வந்துள்ளார். அதன் டிரைவராக வேலை பார்த்துவருபவர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த நாகநாதன் (வயது 52). இதனிடையே, சுந்தரது கார் டிராவல்ஸ் ஏஜென்சி ஒன்றின் மூலம் குற்றாளத்திற்கு சுற்றுலாவிற்காக புக் செய்யப்பட்டதன் அடிப்படையில், கடந்த 6-ம் தேதி ஒரு பெண் உட்பட 4 பேரை ஏற்றிக்கொண்டு காரினை நாகநாதன் ஓட்டிச்சென்றுள்ளார்.

8-ம் தேதியுடன் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், சந்தேகமடைந்த சுந்தர், இதுகுறித்து அசோக் நகர் போலீசில் கடந்த 10-ம் புகார் கொடுத்துள்ளார்.  இதன்பேரில், அசோக் நகர் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கடந்த 16-ம் தேதி மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் அழுகிய நிலையில் கிடந்த டிரைவர் நாகநாதனின் உடலை கண்டறிந்து மீட்டு விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், நாகநாதனின் சடலம் கிடைத்த அதே பகுதியில் உள்ள கார் ஷெட்டில் அவர் சென்ற காரும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காரினை கொண்டுவந்துவிட்டது யார்? என்பது குறித்து அந்த கார் ஷெட்டின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், அப்பகுதிகளில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி கேமரா பதிவுகளின்படி, நாகநாதன் சென்ற இடத்திற்கெல்லாம் அவருடன் பெண் ஒருவர் சென்றுள்ளதும், அவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் குரோம்பேட்டையில் வசித்துவருபவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.