சென்னை, செப்.21: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில ஆசாமி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை சென்ட்ரலுக்கு வரும் ஹவுரா விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடந்த சில நாட்களாக ரெயில்வே போலீசார் ஹவுரா விரைவு ரெயிலில் வரும் பயணிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஹவுரா விரைவு ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் பெண் எஸ்ஐ சரளா மற்றும் போலீசார் சந்தேகத்திற்கு இடமான பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது பிளாட்பாரம் 5-ல் வந்த 3 நபர்களின் உடமைகளை தனித்தனியாக சோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவரது பையில் 18 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் பாண்டி பூர்ணசந்திரா (வயது 33) என்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இவர் விஜயவாடாவில் கஞ்சாவை வாங்கி கேரள மாநிலத்திற்கு சென்னை மூலம் கடத்தி செல்ல முற்பட்டதும் தெரிய வந்தது.

இதே போன்று மற்றொருவரது பையை சோதனை செய்த போது அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த நபர் ஒரிசா மாநிலம் ஆனந்தகுரி என்ற பகுதியை சேர்ந்த துர்சன் (வயது 65) என்பதும், இவர் விஜயவாடாவில் கஞ்சாவை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. 3-வதாக வந்த நபரின் பையை போலீசார் சோதனை செய்ததில் அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவரது பெயர் வனராஜ் (வயது 52) கம்பம் கேம்ப்ரோடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த ரெயில்வே போலீசார் கஞ்சா மற்றும் அதனை கடத்தி வந்த மூவரையும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.