புதுடெல்லி, செப்.23: டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வருகிறது.

கடந்த 5-ம் தேதி முதல் திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் உடல்நிலை, வயது ஆகியவற்றை காரணம் காட்டி அவரது தரப்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆகஸ்ட் 21-ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ம் தேதிவரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திகார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் சென்று சந்தித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். த அப்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்தார்.

தற்காலிக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார் சிறைக்கு சென்று தன் தந்தையை சந்தித்து பேசியதற்காக கார்த்தி சிதம்பரம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.