மும்பை, செப்.23: இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலையில் ஏற்றத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் போன்ற துறைகளின் பங்குகள் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அறிவித்ததையடுத்து, பங்குச்சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுச்சி ஏற்பட்டது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 291 புள்ளிகளும் உயர்ந்தது. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்து 38,792 புள்ளிகளிலும், நிப்டி 242 புள்ளிகள் உயர்ந்து 11,517 புள்ளிகளாக இருந்தது.