சென்னை, செப்.23: நாங்குநேரி, விக்கரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அரசியல் கட்சிக்கள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் முதல் நாள் அன்று சுயேச்சைகளே மனு தாக்கல் செய்தனர்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட குமரிஅனந்தன் நேரில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டி தொகுதிக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதேபோல் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கும் இதே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று திங்கட்கிழமை தொடங்கியது.

மனுதாக்கலுக்கு கடைசி நாள் வரும் 30-ம் தேதியாகும். ஆளும் கட்சியான அதிமுக நாங்குநேரி, விக்கரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. விருப்பமனு விநியோகம் நேற்று தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் விருப்பமனு தாக்கல் முடிவுக்கு வருகிறது.

முதல் நாளான நேற்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 27 பேர் விருப்பமனு தாக்கல் செய்தனர். 2-வது நாளான இன்று தமிழக இடைத்தேர்தலுக்கான 2ம் நாளாக இன்றும் விருப்பமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் சார்பில் திருநெல்வேலி புறநகர் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இ.நடராஜன் தலைமையில் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் மனு தாக்கல் செய்தனர். அப்போது திருநெல்வேலி புறநகர் அ.தி.மு.க நிர்வாகிகள் ராஜேந்திரன், அசோக்குமார், டென்சிங் ஆகியோர் இருந்தனர். அதேபோல் விக்கரவாண்டி தொகுதிக்கு கோலியனூர் ஒன்றிய அதிமுக செயலாளரும், கடலூர், விலுப்புரம் மாவட்ட ஆவின் தலைவருமான பேட்டை வி.முருகன் மனுதாக்கல் செய்தார். அவருடன் விக்கரவாண்டி ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பி.டி.முகுந்தனும் மனுதாக்கல் செய்தார். இவர்கள் தவிர 10க்கும் மேற்பட்டவர்கள் இன்றும் மனு அளித்தனர்.

இன்று மாலை 3 மணி அளவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமாக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் நடத்துகின்றனர். இதன்பின்னர் மாலையில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சார்பிலும் நேற்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. இன்றும் விருப்பமனு தாக்கல் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று காலை விக்கரவாண்டி தொகுதிக்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் டி.ராஜாராமன் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி விருப்பமனுவை தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்பியிடம் வழங்கினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சார்பில் கௌதம் சிகாமணி இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். நாளை காலை 10 மணிக்கு நேர்காணல் முடிவடைந்த பிறகு வேட்பாளர் பெயரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்.

காங்கிரஸ் சார்பில் நாங்குநேரியில் போட்டியிட விரும்புவோரிடம் சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு இன்று முதல் பெறப்பட்டு வருகிறது. இன்று காலை கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் நிர்வாகிகளிடம் விருப்ப மனு அளித்தார். காஙகிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு ஆதரவாளர்களுடன் வந்து விருப்பமனு தாக்கல் செய்தார். நாளை வரை மனுக்கள் பெற்ற பிறகு வேட்பாளர் பெயரை கட்சியின் மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று நாங்குநேரி விக்கரவாண்டி தொகுதிகளில் சுயேச்சைகள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.