நைரோபி, செப்.23:  கென்யாவில் பள்ளி வகுப்பறை இடிந்து விழுந்து தரைமட்டமான விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகூட (வீடு) இன்றி, கூடாரம் அமைத்துதான் இங்கு பெரும்பாலானோர் குடும்பம் நடத்திவருகின்றனர்.
இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது, ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.இந்த இடிபாடுக்குள் வகுப்பில் இருந்த குழந்தைகள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து விரைந்துவந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 7 குழந்தைகளின் சடலங்கை மீட்டனர். மேலும், படுகாயமடைந்த நிலையில், 57 குழந்தைகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.