சென்னை, செப்.23: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் உரிய ஆவணங்களுடன் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டபேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தாயர் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாவும் சாகு கூறினார். தீபாவளி அக்டோபர் 27 ம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பரிசு பொருட்கள் கொண்டு செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, உரிய ஆணவங்களுடன் கொண்டு செல்லலாம், ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
செலவின பார்வையாளர்கள், துணை ராணுவ படையினர் தொகுதிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினரும், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபவர். மேலும், தேர்தல் நடக்கும் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தலா ஒரு பறக்கும் படையும், நிலைக்குழுவும் கண்காணிப்பில் ஈடுபடும்.

விக்கிரவாண்டி தொகுதியில் இம்மாதம் செப்டம்பர் 21 ம் தேதி வரையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் இருக்கிறார். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 721 பேரும், பெண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 710 பேரும் உள்ளனர். இதே போல நாங்குநேரியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்களர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 341 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 698 பேர் உள்ளனர். விக்கிரவாண்டியில் 139 இடங்களில் 275 வாக்குவாசவடிகளும், நாங்குநேரியில் 170 இடங்களில் 299 வாக்குசாவடிகளும் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.