சுபஸ்ரீ வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை

சென்னை, செப்.23: சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதுதொடர்பாக, இளைய தலைமுறை அமைப்பைச் சேர்ந்த தமிழ் மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில். சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது, சாலையின் மத்தியில் கம்பத்தில் கட்டியிருந்த பேனர் அறுந்து விழுந்தது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, போராட்டம் நடத்த அனுமதி அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர் தொடர்பான பொதுநல வழக்கொன்றில், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில், இவ்வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதை வலியுறுத்தியே போராட்டம் நடத்த அனுமதி கேட்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி, தனக்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி கேட்டார். அதற்கு அரசு தரப்பில் ஒரு வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு நீதிபதி கால அவகாசம் தர மறுத்துவிட்டார். நாளை மறுதினம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தார்.