புதுவை, செப்.23: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரூர் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி என்பவரை மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக பாகூர் போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர் விசாரணையின் போது அவரை போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். ஜெயமூர்த்தி மரணம் தொடர்பாக நீதிபதி சரண்யா விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

அவரது அறிக்கையை தொடர்ந்து, பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் சிறைத்துறை டாக்டர் வெங்கட்ரமண நாயக் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்து காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார்.