சென்னை, செப்.24: கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிகாடு கிராமத்தை சேர்ந்தவர்¢சந்திரசேகர் (வயது 55). இவர், கடந்த ஆண்டு (2018) சென்னைக்கு பணியிட மாற்றம் பெற்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்துள்ளார். கே.கே.நகர் கஜேந்திரன் தெருவில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்திரசேகர், கடந்த 3 நாட்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சிறிது நேரத்திலேயே நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சந்திரசேகர் உயிரிழந்துள்ளார்.