கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைப்பு

சென்னை

சென்னை, செப். 24: நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டு நீதிமன்ற நடைமுறைகளுக்கு பிறகு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. சுவாமிக்கு பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் உள்ள குலசேகசமுடையார் உடனுறை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்த விலைமதிப்புமிக்க ஐம்பொன் நடராஜர் சிலை கடந்த 1982ம் ஆண்டு திருட்டு போனது. இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும். இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பின்னர் அந்த நடராஜர் சிலை தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினரின் நடவடிக்கை காரணமாக, 700 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக நடராஜர் சிலை மீட்கப்பட்டது. கடந்த 13-ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை, சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் நடராஜர் சிலைக்கு பல்வேறு ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் வழக்கை விசாரிக்கும் நீதிபதி முன்னிலையில் நடராஜர் சிலை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த சிலையை தங்களிடம் ஒப்படைக் கும்படி, கல்லிடைக்குறிச்சி குலசேகச முடையார் உடனுறை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவில் அதிகாரி மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதி, “மீட்கப்பட்ட நடராஜர் சிலையை கோவிலில் ஒப்படைக்க வேண்டும். கோவிலில் வைக்கப்படும் சிலைக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் ஒப்படைக் கப்பட்டது. 37 ஆண்டுகளுக்கு பிறகு நடராஜர் சிலை இன்று கோவிலுக்கு வந்ததால் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்து நடராஜரை வழிபட்டனர்.