சென்னை, செப். 24: வளர்ந்த நாடுகளின் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப் படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ மதிப்பீட்டு பயணம் தொடர்பான மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- வளர்ந்த நாடுகளில் பணியாற்றி வரும் மருத்துவ நிபுணர்களை வரவழைத்தும், அவர்களது மருத்துவ ஆற்றலை பயன்படுத்தியும் தமிழ்நாட்டில் சாதாரண குடிமகன்களுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அரசின் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விபத்து தொடர்பான சிகிச்சைகளை இங்குள்ள மருத்துவமனைகளில் வழங்கி வருகிறோம்.

அதனை பின்பற்றி வருவதால் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது. சுமார் 4300 பேர் விபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவமனைகள், அனுபவம் மிக்க மருத்துவர்கள், உயர்தரத்துடன் கூடிய சிகிச்சைகள் ஆகியவை குறைந்த செலவில் வழங்கப்பட்டு வருவதால் தமிழ்நாடு மருத்துவத்துறை உயர்நிலையில் உள்ளது. இதற்காக உலக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உலக வங்கி ரூ.3000 கோடி வழங்கி உள்ளது. இதில் ரூ.1684 கோடி சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவர்களுக்கு குறைந்த செலவில் உயர் சிகிச்சை வழங்கப்படுகிறது என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சந்திரமோகன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் எஸ்.சந்திரகுமார் கூறுகையில், தமிழ்நாட்டின் மருத்துவ பயணம் தொடர்பான விசாக்கள் அதிகரித்துள்ளது என்றும் கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் மருத்துவ பயண விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.