கூட்டுறவு ஒன்றிய தலைவராக எஸ்.ஆறுமுகம் தேர்வானார்

தமிழ்நாடு

காஞ்சிபுரம், செப்.24: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், துணைத் தலைவராக எஸ்.ரமேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய இயக்குனர்களுக்கு தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் 21 இயக்குனர்களில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 20 இயக்குனர்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கு மேலாண்மை இயக்குனர் கே சத்யநாராயணன் தலைமை வகித்தார். தேர்தல் அலுவலர் சரிதா தேர்தலை நடத்தினார். இதில் தலைவராக திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், துணைத் தலைவராக எஸ் ரமேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் சரிதா இருவரிடமும் வழங்கினார். இதனை தொடர்ந்து மாலையில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட தலைவரும், துணைத் தலைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு இயக்குனர்கள் ஒன்றிய அதிகாரிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மைதிலி திருநாவுக்கரசு, பத்மநாபன், குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஆர்டி சேகர், நகர மாணவரணி செயலாளர் ஜெயராஜ், கூட்டுறவு வங்கியின் தலைவர் மாலினி, பாலாஜி, மதன் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.