மேட்டூர், செப்.24: காவிரியில் மீண்டும் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்பதால் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணகரி, தர்மபுரி, சேலம் மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய நீர்வள ஆணையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று வரை குறைவான அளவே தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக குறைந்தது. இந்த நிலையில் காவிரியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை தாண்டியது.

அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் தற்போது விடப்படும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை தாண்டும். எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லுமாறு மத்திய நீர்வள ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.