திருச்சி,செப். 25: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் பிஜேபியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். திருச்சியில் பிஜேபி கட்சி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இந்தியாவில் விவசாயம், தொழில் உள்ளிட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசின் செயல்பாடுதான் காரணம். எனவே, தற்போதைய பொருளாதார வீழ்ச்சி பற்றி விமர்சிக்கும் தகுதி காங்கிரசுக்கு கிடையாது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவில் இருந்து விடுபட கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து பல சலுகைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன் விளைவாக பங்குசந்தை நிலவரம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் நேரடியாக கடன் உதவி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பு நடக்கும் கடன் முகாம் மூலம் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைக்கு கடன் பெற்று பொதுமக்கள் பயன்பெறலாம். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் நூலிழையில் பிஜேபி கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பிஜேபி கட்சி போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை இதுவரை முடிவெடுக்கவில்லை. கூட்டணி கட்சியான அ.தி.மு.க. நிச்சயம் இரு தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

தமிழகத்தில்பிஜேபி தலைவர் யார்? என்பதை தேசிய தலைமை முடிவெடுக்கும். தமிழகத்தில் தலைவர் இல்லை என்றாலும், பிஜேபியின் கட்சிப்பணிகள் வழக்கம்போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு இணையான கல்வி தமிழ்நாட்டில் இல்லை என்பதால் கல்வித்தரம் குறைவதாக கவலை கொள்கிறார்கள். அதே கல்வியில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டும் எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.