சென்னை, செப்.25: கூட்டுறவு அங்காடி உள்ளிட்ட ரேஷன் கடைகளில் கிலோ ரூ.33-க்கு வெங்காயம் விற்கப்பட இருப்தாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் துறைசார்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெங்காயம் பதுக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து அதிக அளவு வெங்காய லாரிகள் சென்னை வரத்தொடங்கி உள்ளன. வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இன்றிலிருந்து ரேசன் கடைகளிலும் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் இருந்து ரூ.30க்கு வெங்காயம் வாங்கப்பட்டு, கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் ரூ.33க்கு விற்கப்படும் என்றார்.