சென்னை, செப்.26: உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது, தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் நான்கு ஆண்டுகள் ஆகியும் திருப்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் , நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் மீது பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 3-வது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன்-2 மற்றும் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.