சென்னை, செப்.26:  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஐசிசி மற்றும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி ஒருமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், மாநில கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்குரியவராகிறார், ரூபா.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87-வது ஆண்டுப்பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கான தலைவர் மற்றும் புது நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ரூபா குருநாத், எந்தவித போட்டியுமின்றி சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முதல் பெண் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதேபோல், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளார், பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
யார் இந்த ரூபா குருநாத்?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனருமான ஸ்ரீனிவாசனின் மகள்தான் ரூபா குருநாத் (45 வயது).
கோல்ப் வீராங்கனையான இவர், பல்வேறு முக்கிய கோல்ப் தொடர்களில் பங்கேற்றுள்ளார். மூன்று குழந்தைக்கு தாயான ரூபா பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டு தொடர்பான விஷயங்களில் பல வகைகளில் அதீத ஆர்வம் காட்டியுள்ளார். மேலும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநராகவும் ரூபா உள்ளார்.
போட்டியின்றி தேர்வு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றம் மற்றும் பிசிசிஐ வகுத்த விதிமுறைகளின் கீழ் இத்தேர்தல் நடத்தப்பட்டது.  இதனையடுத்து, சங்க தலைவராக தேர்வு செய்ய இந்திய சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத்தின் பெயரை சங்க உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதற்கான பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு, ரூபா குருநாத் ஒருமனதாக எந்தவிதபோட்டியுமின்றி தேர்வு செய்யப்பட்டார்.