சென்னை, செப்.27: சென்னை மண்ணடியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் கடல் குதிரைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், அவரது தனிப்படை போலீசார் மண்ணடி அங்கப்பன் நாயக்கர் தெருவில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று இன்று அதிகாலை சோதனையிட்டனர்.

அங்கு 5 மூட்டைகளில் 70 கிலோ எடையுடைய கடல் குதிரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து போலீசார் நடத்தி விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த இஸ்மாயில் என்பவர்தான் இந்த கடல் குதிரைகளை எடுத்துவந்து இங்கு பதுக்கிவைத்தது கண்டறியப்பட்டது. இதனை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதாகவும் தெரிகிறது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, இஸ்மாயிலை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகளை, வனத்துறையிடம் ஒப்படைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் குதிரைகளை பதுக்கிவைத்திருந்த மண்ணடியில் உள்ள வீடு பாரூக் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கருவாடு என்று கூறிதான் இவற்றை இங்கு வைத்துவிட்டு சென்றதாகவும், இந்த மூட்டைகளை தான் பிரித்து பார்க்கவில்லை என்றும் பாரூக் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.