சென்னை, செப்.27: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை தேடி தனிப்படை போலீசார் திருச்சி, ஒகேனக்கல் மற்றும் புதுவைக்கு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கில், சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனிடையே கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இதனையடுத்து, தலைமறைவாகி உள்ள ஜெயகோபாலை பிடிக்க பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமறைவாகியுள்ள ஜெயகோபாலை பிடிக்க புதுச்சேரி, ஒகேனக்கல் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு தனிப்படைகள் சென்றுள்ளனர்.