சென்னை, செப்.27: கோயம்பேடு குடிநீர் வடிகால் வாரியத்தில் எலக்ட்ரீஷனாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த வடமாநில தொழிலாளி, பணியின்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் உள்ள குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது. இந்த கட்டிடத்தில் எலக்டீரிஷனாக, பீகாரை சேர்ந்தவர் விபூன் குமார் (வயது 20) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கம்போல் நேற்றிரவு வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், விபூன் தூக்கிவீசப்பட்டார். அருகிலிருந்தவர்கள் விபூனை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு கே.எம்.சி. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.