சென்னை, செப்.27: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள குடிசை மாற்று குடியிருப்புகளுக்கான புதிய கட்டிடங்கள் இன்னும் ஒரு வருட காலத்தில் கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார். மேலும் குடியிருப்புகள் இடிக்கப்படும் போது பொது மக்கள் வெளியே தங்கும் காலத்தில் குடும்பத்திற்கு ரூ.8000 வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் கடந்த 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதால் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.எனவே இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு எடுத்தது. அதன்படி இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. இங்கு மொத்தமாக உள்ள 586 குடியிருப்புகளில் 488 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. புதிய குடியிருப்புகள் கட்ட தற்போது வசிப்பவர்களிடம் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை தர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு இந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழு மானியத்தை அரசு வழங்கி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு இந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்து உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தரப்பட உள்ளதாகவும், 200 சதுர அடி உள்ள வீடுகளை இடித்து 400 சதுர அடி வீடுகளாகவும் கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் ஒரு மாத காலத்துக்குள் தற்போது உள்ள குடியிருப்புகள் இடிக்கப்படும் என்று கூறிய அவர் புதிய வீடுகள் கட்ட ரூ.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ,புதிய வீடுகள் ஓராண்டிற்குள் கட்டித்தரப்படும் எனவும் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர் பொதுமக்கள் வெளியில் தங்கியிருக்கும் காலத்தில் மாதம் 8000 ரூபாய் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றார்.