காஞ்சிபுரம், செப்.27: நவராத்திரியையொட்டி காஞ்சிபுரத்தில் தெருக்கள்தோறும் எங்குபார்த்தாலும் கொலு பொம்மைகள் விற்னை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக ஆதி அத்திவரதர் பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நவராத்திரி விழாவையொட்டி கோவில்களிலும், வீடுகளிலும், கொலு வைக்கப்படும். இதற்காக, சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல தலைமுறைகளாக, கொலு பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னகாஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவைச் சேர்ந்த, தைரியநாதன், இவரின் மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தாருடன் இந்த பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் ஈடுபட்டும் தைரியநாதன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்கும் நாங்கள் பொம்மைகளை ஏற்றுமதி செய்கிறோம். எங்களிடம் சுமார் 3 அங்குலம் முதல் 6 அடிவரை பொம்மைகள் உள்ளன. காகிதக் கூழ் மற்றும் களிமண் என இரண்டு வகையான பொம்மைகள் தயார் செய்கிறோம். ரூ.75-ல் இருந்து ரூ.15 ஆயிரம் வரை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பல்வேறு கடவுள் பொம்மைகள், அஷ்டலட்சுமி, தசாவதாராம், கருடசேவை, கிரிக்கெட், டென்னிஸ், கேரம் உள்ளிட் ஆதிஅத்தி வரதர் பொம்மைகள் நவராத்திரி விழாவுக்காக தயாராகியுள்ளன. இந்த பொம்மையை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மழைக்கால நிவாரணமாக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கி வருகிறது. மழைக்காலங்களில் பொம்மை தயாரிக்க முடியாத சூழலில் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே நிவாரணத் தொகையை உயர்த்திக் கொடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.