புதுச்சேரி, செப். 27: புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிஜேபி, என்ஆர் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.இதனையொட்டி கடந்த 23 ஆம் தேதியிலிருந்து காங்கிரஸ், பிஜேபி சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பிஜேபி சார்பில் காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட 6 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், என்ஆர் காங்கிரஸ் நிறுவனருமான ரங்கசாமி, புதுச்சேரி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினர். அப்போது புதுச்சேரியில் நடைபெறும் காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட என் ஆர். காங்கிரஸ் விட்டுக் கொடுக் குமாறு விருப்பம் தெரிவித்தனர். அதிமுக தலைமையும் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் போட்டியிட இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது.

இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் பிஜேபி தலைமை அலுவலகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நேர்காணல் செய்வது என அறிவித்திருந்தது.என் ஆர் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி பிஜேபி தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், சங்கர் எம்எல்ஏ , துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச் செயலாளர்கள் தங்க விக்கிரமன் ரவிச்சந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் கேசவன், ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் 11 மணியிலிருந்து விருப்ப மனு தாக்கல் செய்த பிசிசி நாகராஜன், தியாகராஜன், ரங்கராஜன், கமலினி, கணேஷ் உள்பட 6 பேரிடமும் பிஜேபி மாநில தலைவர் சாமிநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் நேர்காணல் செய்தனர். இதில் என் ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் பிஜேபிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அப்போது வருகின்ற காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பிஜேபி தனித்து போட்டியிடுவது உறுதி என்றும் அதற்காக அகில இந்திய பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளதாகவும் வரும் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாகவும் கூறினார். இதனால் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ், அதிமுக, பிஜேபி இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.