சென்னை, செப்.27: என் நண்பர்களான ரஜினி, கமல் இரண்டு பேருக்கும் ஒரே வேண்டுகோள், அரசியல் வேண்டாம் என்று அரசியலில் சூடுபட்ட தெலுங்கு பட சூப்பர் ஹீரோ சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். என்னுடைய சொந்த தொகுதியில் கோடிக்கணக்கில் செலவு செய்து தோற்கடித்தார்கள். என் தம்பி பவன் கல்யாணுக்கும் இதே கதிதான் நேர்ந்தது என்று நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார். பிரபல நடிகர் சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஒன்பது வருஷ அரசியல்ல நிறையவே கத்துக்கிட்டேன். எனக்கு அரசியல் சரிப்பட்டு வராதுன்னு கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சது. இந்தச் சமூகத்துக்கு ஏதாவது பண்ணணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா, ஒவ்வொரு முறையும் அரசியல் நன்றிகெட்ட தொழில்னு உணர்த்திக்கிட்டே இருந்துச்சு.

அந்த ஒன்பது வருஷங்கள்ல அரசியல்னா என்ன, அரசியல்வாதி எப்படி இருப்பாங்க, அவங்க மனநிலை எப்படி இருக்கும்னு நல்லாத் தெரிஞ்சுகிட்டேன். தப்பே பண்ணாம நம்ம மேல குற்றம் சொல்லுவாங்க. அதை மீடியா வேற மாதிரி கொண்டுபோகும்னு அதிக மன உளைச்சலைக் கொடுத்த நாள்கள் அவை. என்னைப்போல எமோஷனலானவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது. இப்போ அரசியல்ல எல்லாமே பணம்தான். உண்மையா நல்ல அரசியல் பண்ணணும்னு வருவோம்; ஆனா பண்ணமுடியாது. சினிமாவுல நான் நம்பர் ஒன் இடத்துல இருந்தேன். அதையெல்லாம் விட்டுட்டு, அரசியலுக்கு வந்தேன்னா அப்போ எவ்வளவு ஆர்வத்தோட வந்திருப்பேன்னு பாருங்க. ஆனா, என் சொந்தத் தொகுதியில என்னைத் தோற்கடிக்கக் கோடிக்கணக்குல செலவு பண்ணுனாங்க. என்னைத் தோற்கடிச்சாங்க. அப்போ நான் ரொம்ப நொந்துபோயிட்டேன். இதேதான் என் தம்பி பவன் கல்யாணுக்கும் நடந்தது.

இந்த முறை கமல் ஜெயிப்பார்னு எதிர்பார்த்தேன். ஆனா, அது நடக்கலை. தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள்னு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தால் யார்வேணாலும் அரசியலுக்கு வரலாம். முன்னாடி சொன்ன மாதிரி என்னைப்போல சென்சிட்டிவா இருக்குறவங்களுக்கு அரசியல் சரிப்படாது. கமல், ரஜினி என்னை மாதிரி இருக்கமாட்டாங்கன்னு நம்புறேன். என் நண்பர்களான ரஜினி, கமல் ரெண்டு பேருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான். அரசியல் வேண்டாம். ஆனா, இதையெல்லாம் மீறி எவ்வளவு தோல்விகள், ஏமாற்றங்கள், கெட்ட பெயர்கள் வந்தாலும் அசராமல் மக்களுக்காக ஏதாவது செஞ்சே ஆகணும்னு நினைச்சா, அரசியலுக்கு வாங்க; அரசியல்ல தைரியமா செயல்படுங்க. ஒருநாள் காலம் உங்களுக்கானதா மாறலாம். இவ்வாறு அந்த பேட்டியில் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.