சென்னை, செப்.27: நாங்குநேரி தொகுதி வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வில் மேலிடம் மும்முரமாக இருப்பதாக நாங்குநேரி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் தேர்வுக்கு கட்சி மேலிடத்தின் ஒப்புதலை பெறுவதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்தகுமார் எம்பி ஆகியோர் டெல்லி சென்று விட்டனர். வேட்பாளர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார். ஆனால் இன்று மதியம் வரை அறிவிப்பு வெளியாகவில்லை. மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ் போட்டியிடுவதற்கு தகுதியானவர் என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்பமனு தாக்கல் செய்திருந்த போதிலும் அவர் வயது முதிர்வை கருதி போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்திரை ஆதரித்து திமுக தரப்பில் தீவிர பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்நேரி தொகுதி தேர்தல் பணிக்குழுவையும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்காக திமுக அமைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. 23-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வரும் 30-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.