காபுல், செப்.28:  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவேன் என்று அந்த அணியின் பயிற்சியாளராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள லான்ஸ் குளூஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிம்மன்ஸின் பதவி காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்ததை அடுத்து புதிய பயற்சியாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதன்படி பெறப்பட்ட 50 விண்ணப்பங்களில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான குளூஸ்னர் புதிய தலைமை பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2020-ம் ஆண்டு வரை அவர் இந்த தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருப்பார் என்றும், அதன்பின்னர், அணியின் செயல்பாட்டின் அடிப்படையில் அவரது ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஆப்கான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து குளூஸ்னர் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் திறமையான வீரர்களை கொண்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். கடுமையான பயிற்சி முலம் உலகின் சிறந்த அணியாக ஆப்கான் அணியை மாற்ற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு உதவியாக இருப்பேன் என்றார்.