மும்பை, செப்.28:  இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நீர் தேங்கிய இடத்தில் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புதிய கிரிக்கெட் பயிற்சிமுறை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள் சச்சின், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றாலும், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது அவர் புதுமையான முறையில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குட்டை போல் தேங்கியுள்ள தண்ணீரில் அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொள்வதுபோல் அமைந்துள்ளது. இந்த வீடியோவுடன் அவர் ஒரு வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் மீது உள்ள ஆர்வமும் காதலும் எப்போதும் பயிற்சி செய்ய புதிய முறைகளை கற்று தரும். அத்துடன் நாம் என்ன செய்கிறோமோ அதனை நாம் அனுபவித்து செய்யவேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். நீர் தேங்கிய இடத்தில் சச்சின் டெண்டுல்கர் லவகமாக பந்துகளை அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.