நாங்குநேரி, செப்.30: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மதியத்துடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 3-ம் தேதி கடைசி நாள். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜ்நகர் தொகுதிக்கும் அடுத்த மாதம் 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மதியம் அதிமுகவுடன் சென்று மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வந்தகுமார் எம்பி மற்றும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுடன் சென்று நாங்குநேரி தேர்தல் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் நா.புகழேந்தி ஆகியோரும் தேர்தல் அதிகாரியிடம் இன்று மதியம் 12 மணி அளவில் மனு தாக்கல் செய்தனர். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமாரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதிகளில் கடந்த 23-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. விக்கிரவாண்டியில் 8 பேரும், நாங்குநேரியில் 12 பேரும் மனு அளித்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 3-ம் தேதி மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.