சென்னை, செப்.30: ஐநா சபையில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து தான் பேசியதை தொடர்ந்து தற்போது அமெரிக்க ஊடகங்களில் தமிழ்¢மொழி குறித்து செய்திகள் அதிகம் இடம் பெற்றிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி, கவர்னர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல், பாஜக தொண்டர்கள் சார்பாக பாஜக நிர்வாகிகளும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமானநிலையத்தில் பிஜேபி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சென்னைக்கு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். 2019 மக்களைவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக சென்னை வந்துள்ளேன். ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த என்னை வரவேற்பதற்காக தொண்டர்கள் இவ்வளவு பேர் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்க தமிழர்கள் மத்தியிலும், ஐ.நா சபையிலும் தமிழ் மொழியின் தன்மை குறித்து பேசியுள்ளேன். தற்போது அங்குள்ள ஊடகங்களில் அந்த செய்திகளே அதிகம் வெளியாகி வருகின்றன. நம் நாடு குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை நாங்கள் மட்டும் நிறைவேற்ற முடியாது. நாட்டின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும், 130 கோடி மக்களும் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும் என நான் குறிப்பிடவில்லை. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளில் பாதயாத்திரை செல்லவுள்ளோம், அந்த யாத்திரையின் போது காந்தியடிகளின் சித்தாந்தங்களை எடுத்து கூறவுள்ளோம். மீண்டும் ஒரு முறை என்னை வரவேற்பதற்காக வந்துள்ள உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என கூறினார். தமிழர்களின் இட்லி, தோசை, வடை அனைத்தும் எனக்கு பிடிக்கும்: மோடி தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேசும் போது குறிப்பிட்டார்.