புதுடெல்லி, செப்.30:  கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினர் பதவி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஐசிஏ) இயக்குநர் பதவியையும் சாந்தா ரங்காசாமி ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி. பிசிசிஐ நியமித்துள்ள சிஏசி குழுவில் கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், சாந்தா ரங்கசாமி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஐசிஏ) இயக்குநராகவும் இருந்தார்.

இந்த நிலையில், இந்த 2 பதவியையும் ராஜினாமா செய்வதாக அவர் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.  சிஏசி உறுப்பினர்களான கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகிய 3 பேரும் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, பிசிசிஐ நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வரும் 10-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மூன்று பேருக்கும் டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்தே, தனது பதவிகளை சாந்தா ரங்கசாமி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.