சென்னை, செப்.30: நீட்தேர்வு முறைகேடு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, பிஜேபி கூட்டணி தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் முதலமைச்சரின் சிறப்பு குறைகேட்பு திட்டம் முகாம் நடைபெற்றது. இதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபர்களிடம் கூறியதாவது:- “யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை பிரதமர் ஐ.நா. சபையில் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது . இதனை தமிழர்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். நீட் தேர்வு முறைகேடுகளை தமிழக காவல்துறையினர்தான் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, எங்கெல்லாம் முறைகேடு நடந்திருக்கிறதோ அதனைக் கண்டறிந்து அதில் ஈடுபட்டோர் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், இது மத்திய அரசு நடத்தும் தேர்வு. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் ஏற்படாவண்ணம் அரசு விழிப்புடன் இருந்து செயல்படும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தேவையின்றி ஒவ்வொரு திட்டத்தையும் குறை கூறி வருகிறார். என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். ஆனால், இதுவரையில் எதையும் நிரூபிக்கவில்லை. கீழடியில் முதல் மூன்று கட்ட ஆய்வுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது. நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடிப் பகுதியில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் க, பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டுள்ளார். அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும். மக்களவைத் தேர்தல் கூட்டணி உருவாகும்போதே இடைத் தேர்தல்களில் நாங்கள்தான் போட்டியிடுவோம் என்று ஏற்கெனவே அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறோம். அதன்படி விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலிலும் அதிமுக, பிஜேபி கூட்டணி தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.