புதுவை, அக்.1: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுச்சேரியை சேர்ந்த இருதரப்பு மீனவர்களிடையே திடீரென எழுந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக 120 பேர் மீது தகவளகுப்பம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. புதுச்சேரி மாநிலம், நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு குழுவாக இணைந்து, மீன்பிடிப்பதற்காக நேற்று நடுக்கடலுக்கு சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடலில் விழுந்த மீன்கள், காற்றில் அடித்துச்செல்லப்பட்டு வீராம்பட்டினம் மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்குச் சென்றுவிட்டது.

அதனை எடுக்க சென்றபோது, வீராம்பட்டினம் மீனவர்களுக்கும், நல்லவாடு மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த வீராம்பட்டினம் மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் படகுகளில் திரண்டு வந்ததால் பதற்றம் நிலவியது. அதேசமயம், ஆத்திரம் தாளாத நல்லவாடு மீனவர்கள் கடலில் விழுந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே நடுக்கடலிலேயே மோதல் முற்றியுள்ளது. பின்னர் கரைக்கு வந்ததும், இதுகுறித்து, நல்லவாடு மீனவர் குப்பத்தை சேர்ந்த நடராஜன் தவளகுப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீரம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் புகழேந்தி வினோத் பிரபு உள்பட 120 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் தவளகுப்பம் அடுத்த நல்லவாடு மீனவர் குப்பத்தில் உள்ள மீனவர்களுக்கும். வீராம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த சமயங்களில் இரண்டு கிராமங்களையும் சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார் மற்றும் போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைப்பது குறிப்பிடத்தக்கது.