சென்னை, அக்.1: ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேம்பட இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கதராடை அணிய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கதரின் பயன்பாடு சுதேசியின் அடித்தளமாகும் என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை நினைவில் கொண்டு, அன்னாரின் பிறந்தநாளான இந்நன்னாளில், கதராடைகளை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும்.

கைராட்டைகளைக் கொண்டு நெசவு செய்யப்படும் கதர் இரகங்களை தயாரிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்களால் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மற்றும் சர்வோதய சங்கங்களில் பணிபுரியும் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்துஇயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், ஏழை, எளிய நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, அவர்தம் வாழ்வு சிறக்க உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.