மும்பை, அக்.1: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தொடங்கி 53 ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக பால்தாக்கரேயின் குடும்பம் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. பால்தாக்கரேயின் பேரனும், உத்தவ்தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே ஓர்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். சிவசேனா கட்சியை கடந்த 1966-ம் ஆண்டு பால்தாக்கரே ஆரம்பித்தார். மராட்டியர்களின் நலனுக்காக மண்ணின் மைந்தர் கோட்பாட்டுடன் கட்சியை ஆரம்பித்து வழிநடத்திய அவர் தனது வாழ்நாளில் ஒரு போதும் தேர்தலில் போட்டியிட்டது இல்லை. அரசு பதவியும் வகித்தது இல்லை. பால்தாக்கரேயின் மறைவுக்கு பின் சிவசேனாவின் தலைமை பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயும் தந்தை வழியில் கட்சி பொறுப்புகளை மட்டுமே வகித்து வருகிறார்.

இதுவரை அவரும் தேர்தல் களத்தில் இறங்கியது இல்லை. மும்பையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே தான் ஒர்லி தொகுதியில் களம் இறங்குவதாக தெரிவித்தார். இதன் மூலம் சிவசேனா வரலாற்றில் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தலைவர் என்ற சிறப்பை ஆதித்ய தாக்கரே பெறுகிறார். ஒர்லி தொகுதி சிவசேனாவின் செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால் அங்கு ஆதித்ய தாக்கரேயின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக சிவசேனா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.