கல்லூரிகளிடையே வினாடி வினா நிகழ்ச்சி

சென்னை

சென்னை அக்.2: மத்திய சென்னை அரிமா சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கிடையே 49வது வினாடிவினா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஐஐடி சென்னை மாணவர்கள் முதல் இரண்டு இடத்தையும் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 1971-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் மத்திய சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் கல்லூரிகளுக்கிடையேயான வினாடிவினா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 49வது வினாடிவினா நிகழ்ச்சி சென்னை சங்கரா நேத்ராலயாவில் உள்ள வி.டி.சுவாமி ஆடிடோரியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 18 கல்லூரிகளில் இருந்து 86 மாணவர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் சுமந்த் மற்றும் சி.ராமன் ஆகியோர் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினர். ஒவ்வொரு அணியிலும் 2 மாணவர்கள் வீதம் 86 மாணவர்கள் பல்வேறு அணிகளாக போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் 2 மாணவர்கள் பங்கேற்ற 6 அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. இறுதி போட்டியில் ஐஐடி சென்னை நிறுவனத்தை சேர்ந்த துருவ்ஸ்ரீராம் மற்றும் சாத்விக் அனந்த கிருஷ்ணன் ஆகியோரை கொண்ட அணி முதலிடத்தை பெற்றது.
அவர்களுக்கு வெள்ளி பதக்கமும், தலா ரூ.1500 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும் அதே நிறுவனத்த சேர்ந்த மாணவர் எல்.கால்வின் மற்றும் மாணவி ஜி.அபிராமி ஆகியோர் கொண்ட அணி 2வது இடத்தை பெற்றது. அவர்களுக்கு வெள்ளி பதக்கமும், தலா ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்பட்டது. மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியை சேர்ந்த மாணவர் பி.கே.விஷ்ணு மற்றும் ஜேக்கப் ஜே.புதின் வீட்டில் ஆகிய மாணவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்தனர். அவர்களுக்கு வெள்ளி பதக்கமும், தலா ரூ.500 ரொக்கமும் வழங்கப்பட்டது. 6 மாணவர்களை கொண்ட 3 அணிகளுக்கு தலா ரூ.250 வீதம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரொக்க பரிசுகளை நீதிபதி பி.வேணுகோபால் நினைவு அறக்கட்டளை வழங்கியது. அரிமா சங்கத்தின் அறங்காவலர்களில் ஒருவரான ஆண்டாள் ராஜாராம் ரொக்க பரிசுகளை வழங்கினார். விழாவில் அரிமா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.