விசாகப்பட்டினம், அக்.2: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் ஆகியோர் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடிவர, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது.அதன்படி, இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த இந்திய அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால்-ரோஹித் சர்மா வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். மதியஉணவு இடைவேளையின் போது, இந்திய அணி 30 ஓவர்களில் விக்கெட்டுகளை விட்டுகொடுக்காமல் 91 ரன்கள் குவித்தது. தொடர்ந்து நிதானத்துடன் கூடிய நிலையான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்திவருகின்றனர். 1 மணி நிலவரப்படி, இந்திய அணி 44 ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பின்றி 135 ரன்கள் குவித்துள்ளது.  மயங்க் அகர்வால் 56 ரன்களுடனும், ரோஹித் சர்மா 78 ரன்களுடனும் களத்தில் இருந்து பேட்டிங் செய்துவருகின்றனர். பல்வேறு விமர்சனங்களை சுமந்தபடி, டெஸ்ட் போட்டியில் தனது ஆட்டத்திறனை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா, சிறப்பாக விளையாடிவருவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.