சென்னை, அக். 3: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும். தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாவட்டந்தோறும் வெளியிட இருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டுமென திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்களின் அடிப்படையில் அந்த கட்சியின் வேட்பாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம். அதன் அடிப்படையில் சின்னம் ஒதுக்கவது தொடர்பாக கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது. இதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அதனடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநில தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டந்தோறும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதை தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் அக்.4-ம் தேதி நாளை வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அப்பட்டியலை அடுத்த நாள் அக்.5-ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி நாளை உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்டந்தோறும் வெளியிடப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தென்னம்மாதேவியில் நடந்த தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில்வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்தல் நடைபெறும்.

யார் நினைத்தாலும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியாது. இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதோடு இதே கூட்டணியோடும், உற்சாகத்தோடும் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்ற அவர், விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். உள்ளாட்சி தேர்தல் தேதி நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.