புதுடெல்லி, அக்.3: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டடதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்துவது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விசாரணைக்கு பிறகு செப்டம்பர் 5-ம் தேதியில் இருந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை கடந்த திங்கட்கிழமை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சிதம்பரம் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் என்பதால் சாட்சிகளை கலைக்க முயற்சிப்பார் என்பதை நிராகரிப்பதற்கு இல்லை என்றும், விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்து விட்டது என்பதாலும் இப்போது ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ப.சிதம்பரம் சார்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 பேரைக் கொண்ட பெஞ்ச் பரிசீலித்தது. பின்னர் இந்த மனு மீது விசாரணை நடத்துவது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் என்றும், சிதம்பரத்தின் வேண்டுகோள் அவருக்கு அனுப்பப்படும் என்றும் கபில் சிபலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடிக்கு வெளிநாட்டு முதலீட்டை பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடு குறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரமும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.